400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேந்தநாடு திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 May 2026

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேந்தநாடு திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா.

 


ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா உடனுறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.


பழமை மற்றும் பக்தி மரபுகளை தன்னகத்தே கொண்ட இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கிருஷ்ணர், அர்ஜுனன், திரௌபதி அம்மன் ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தன.


திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் தீமிதி உற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பூக்குழி அமைக்கப்பட்டு, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.


சேந்தநாடு, ஆண்டிக்குழி, வானம்பட்டு, மட்டிகை, ஒடப்பங்குப்பம், கள்ளமேடு, இளவத்தடி, தொப்பையன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திரௌபதி அம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் ஆர். முரளி, ஆர். வெங்கடேசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


பக்தர்கள் திரளாக கலந்து கொண்டதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


பக்தர்களின் கோஷங்கள், அம்மன் பக்திப் பாடல்கள், தீமிதி நிகழ்வின் ஆன்மிக உற்சாகம் ஆகியவற்றால் சேந்தநாடு கிராமமே திருவிழா கோலமாக காட்சியளித்தது.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad